தமிழ் சினிமாவின் தலையெழுத்தை மாற்றிய இரண்டு முக்கியமான இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் மகேந்திரன். ஸ்டுடியோக்களில் பரிதாபமான செட் போட்டு படமெடுத்து கொண்டிருந்த காலத்தில், ஒரு கிராம வாழ்க்கையை தன் 16 வயதினிலே படம் மூலம் யதார்த்தமான படம் எடுக்கும் உத்தியை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. சினிமா ஒரு விசுவல் மீடியம். ஒளி, ஒலி, காட்சி அமைப்பு, யதார்த்தம் மற்றும் நாடகத்தனம் இல்லாத திரைக்கதை அமைப்பு என இந்தியாவையே தனது பதேர் பாஞ்சாலி படம் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் சத்தியஜித் ரே. அவருடைய பாதிப்பால் சினிமாவுக்கு வந்த இயக்குனர் மகேந்திரன். தமிழ் சினிமாவின் நாடக பாணி மற்றும் செயற்கையான நடிப்பு இரண்டையும் மகேந்திரன் வெறுத்தார். அவரது முதல் படமான முள்ளும் மலரும் மூலமாக தமிழ் சினிமாவின் பாதையை நிரந்திரமாக மாற்றியவர் மகேந்திரன்.
இந்த 2 இயக்குனர்களின் முதல் படத்திலும் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த். 1 ரூபாய்க்கு நடிக்க சொன்னால் 1 லட்சம் ரூபாய்க்கு செயற்கையாக நடித்து கொண்டிருந்த நடிகர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், மிகையில்லாத நடிப்பு, ஆண்மைத்தனமான வேகம் மற்றும் ஸ்டைல் இரண்டையும் கலந்து தனக்கென்று ஒரு தனி பாணியை (தனி வழி) அமைத்து மிக குறுகிய காலத்தில் பெரும் மக்கள் செல்வாக்கை பெற்றார் ரஜினி. தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர் மகேந்திரனுக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜினிகாந்த். முள்ளும் மலரும் படத்தில் ரஜினி வெளிக்காட்டிய நடிப்பு இன்று வரை எந்த தமிழ் நடிகராலும் வெளிக்கொண்டு வர முடியவில்லை என்பது என் ஆணித்தரமான கருத்து. ஒரு தலை சிறந்த இயக்குனரும் ஒரு தலை சிறந்த நடிகனும் இணைந்த இரண்டாவது படம் ஜானி.ரஜினிக்கு இரட்டை வேடம். நாயகி ஸ்ரீதேவி. இந்த படத்தில் மேலும் இரண்டு ஹீரோக்கள் — இசை அமைப்பாளர் இளையராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் அஷோக்குமார்.
ரஜினி ஸ்ரீதேவியின் சந்திப்பும் அந்த காதல் காட்சியும் தமிழ் சினிமாவின் உச்சம். ஒருவிதமான சோகத்தை கண்களில் தேக்கிக்கொண்டு பிரமிக்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்துவார் ஸ்ரீதேவி. அந்த பிரமிப்பில் இருந்து மீள்வதற்குள்ளாக ரஜினி தனது யதார்த்தமான அற்புதமான நடிப்பால் புல்லரிக்க வைப்பார். ரஜினியின் உடல் மொழி ஆச்சரியப்பட வைக்கும். வெட்கமும், காதலும், ஆண்மையும் கலந்த மிகையில்லாத அற்புதமான நடிப்பு அது. இந்த காட்சி தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல். நாயகன் மற்றும் நாயகனின் கிளோஸ் அப் காட்சிகள் அவர்களை மேலும் அழகாக காட்டும். பின்னணி இசையில் இசை ஞானி பின்னி எடுத்திருப்பார்.
ஒளிப்பதிவாளர் அஷோக்குமார் ஒரு மகா கலைஞர். காம்போசிஷன், 3 பாயிண்ட் லைட்டிங், கான்ட்ராஸ்ட் மற்றும் கிளோஸ் அப் படிக்க வேண்டும் என்றால் இந்த படம் ஒரு புத்தகம். உங்களுக்கு ஒரு சவால். ‘ஒரு இனிய மனது’ பாடல் போல் லைட்டிங், பிரேமிங் உள்ள பாடல் காட்சி எது என்று யோசித்து பாருங்கள். உங்களால் அது முடியாது.சில காட்சிகளை கீழே பதிவிட்டுள்ளேன். அதை தனியாக விளக்க வேண்டியதில்லை. பார்த்தாலே உங்களுக்கு புரிந்து விடும்.
இந்த படத்தை பற்றி நான் முழுவதுமாக விளக்க வேண்டும் என்றால் அதற்க்கு நான் இன்னும் 30 பக்கங்கள் எழுத வேண்டும். யூடியூபில் இந்த படம் இருக்கிறது. கண்டிப்பாக பாருங்கள். ஒவ்வொரு காட்சியையும் பிரேமையும் ரசித்து பாருங்கள். மகேந்திரன் யார், ஸ்ரீதேவி யார், இளையராஜா யார், அசோக் குமார் யார், குறிப்பாக ரஜினிகாந்த் யார், அவர் எப்பேர்பட்ட அற்புதமான நடிகர் என்பது உங்களுக்கு புரியும்.