சார்பட்டா பரம்பரை

Wijay000
2 min readJul 30, 2021

--

மொபைல் போன், சோசியல் மீடியா காலத்தில் எவருடைய கவனத்தையும் 5 நிமிடத்திற்கு மேல் வைத்திருப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. உலகின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான பவுலோ கோயல்ஹோ கூட தனது பிளாக் கட்டுரைகளை 2 நிமிடத்திற்குள் படித்து விடும் அளவிற்கு சுருக்கி எழுதுகிறார். உலகின் முன்னணி நகைச்சுவை நாயகனான ரசல் பீட்டர்ஸ் 4 நிமிட யூடுயூப் விடியோக்கள் வெளியிடுகிறார். இந்திய திரைப்படங்கள் 2 மணி நேர படங்களாக மாறிய பிறகும் ரசிகர்களை கவனச்சிதறல் இல்லாமல் தியேட்டர்களில் உட்கார வைப்பது இயக்குனர்களுக்கு கடுமையான சவால். கொரோனா காரணமாக தியேட்டர்களும் மூடப்பட்டு விட்டன. இந்த கடுமையான சூழ்நிலயில் அமேசான் ப்ரைம் மூலமாக வெளிவந்துள்ள படம் தான் சார்பட்டா பரம்பரை.

படத்தின் நீளம் 2 மணி நேரம் 53 நிமிடம். என்ன ஆச்சரியம் என்றால் அந்த 2 மணி நேரம் 53 நிமிடம் நம்மை முழுவதுமாக கட்டிப்போட்டு விடுகிறார் இயக்குனர் ரஞ்சித். ஒரு காபி சாப்பிட வேண்டும் என்று தோன்றவில்லை. கழிப்பறை செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. போனை எடுத்து இன்ஸ்டாகிராம் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. இதை தியேட்டரில் செய்வதே மிகப் பெரிய சவால். இதை வீட்டில், டீவியில் பார்க்கும் சூழலில் செய்து காட்டி தான் யாரென்று ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார் ரஞ்சித். ரஞ்சித் தான் படத்தின் முதலும் மூலமும். அப்படி ஒரு திரை ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அபாரம்!

படத்தின் கதைக்களம் அற்புதம். இப்படி ஒரு உலகம் நம் மண்ணில் இருக்கிறதா என்று நம்மை வியக்க வைக்க இயக்குனருக்கு அவரது தொழில்நுட்பக்குழு பெரும் பணி ஆற்றியிருக்கிறார்கள். 70களின் வடசென்னையை தத்ரூபமாக உருவாக்கியிருக்கிறார்கள். அதில் வாழும் மனிதர்களையும் குத்துச்சண்டை வீரர்களையும் மிக நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார் ரஞ்சித். யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை. கபிலன், ரங்கன் வாத்தியார், டான்சிங் ரோஸ், டாடி, ராமன், வெற்றி, தணிகா, வேம்புலி, மாரியம்மா, அம்மா என ஒவ்வொரு பாத்திர படைப்பும் அற்புதம். படம் முழுவதும் வந்தால் தான் பெரிய கதாபாத்திரம் என்னும் மாயையை அடித்து நொறுக்கியிருக்கிறது டான்சிங் ரோஸ் பாத்திரம். நடிகர்கள் அனைவரும் கடுமையான உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். அவர்கள் உழைப்பு வீண் போகவில்லை.

இத்திரைப்படம் திரையில் ஒரு ஜனநாயகம். தியேட்டர் இல்லாமலும் சினிமா பரம்பரை வாழும்.

--

--

Wijay000

Entrepreneur & Writer; ex-WEF/ Innosight; Innovation work featured in Lean Startup, First Mile. Led award winning animation series; Author of a book on Net Zero